இப்படி தினம் தினம் சண்டை போடாதீர்கள்

தன்னை இழிவுபடுத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார். முன்னதாக நேற்று, வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் இந்த சேதங்கள் தொடர்பாக மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களை அவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.
இது பெரும் சர்ச்சையானது. பாஜக தேசியத் தலைவர் நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மக்களுடன் பிரதமர் மோடி உறுதுணையாக நிற்கும்போது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது அகங்காரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் மேம்பாட்டுக்காக நிற்க வேண்டும். ஆனால் பிரதமருடனான சந்திப்பை அவர் புறக்கணித்திருப்பதன் மூலம், அரசியல்சாசன நெறிமுறைகளையும் கூட்டாட்சி கலாச்சாரத்தையும் அவர் படுகொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று பேசியுள்ள மம்தா பானர்ஜி, “நான் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட முன்னதாகவே திட்டமிட்டுவிட்டேன். அதன்படி சாகர், திகா பகுதிகளுக்குச் சென்றேன். ஆனால், பிரதமர் திடீரென அவரது பயணத்தைத் திட்டமிட்டார். அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையாக பிரதமர் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார். அவர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையே சந்தித்தார்.இருந்தும்கூட நான் எனது சகாக்களுடன் விமானத்தளத்தில் 15 நிமிடங்கள் வரை பிரதமரை சந்தித்துவிட்டுத்தான் சென்றேன். சில திட்டவரைவுகளை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன். எனது பயணத்தைத் துவங்குவதற்கு முன் பிரதமரின் அனுமதியையும் பெற்றுச் சென்றேன்.
பிரதமர் தலைமையிலான வெள்ள பாதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்கவில்லை. அப்படியிருக்க பாஜகவினர் என்னை வசைபாடுகின்றனர்.
மேற்குவங்கத்தில் நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றோம். அதனாலேயே நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்களா? எல்லாவிதமாகவும் எதிர்ப்பைக் காட்டி தோற்றுவிட்டதால் இப்படிச் செய்கிறீர்களா? என்னை இப்படி இழிவுபடுத்தாதீர்கள். எங்களுடன் தினம் தினம் சண்டை போட வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.

Related posts