கொவிட் நியூமோனியா நிலை காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான, பத்தேகம சமித்த தேரர் மரணமடைந்துள்ளார்.
லங்கா சம சமாஜக் கட்சியின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மாத்தறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) அதிகாலை மரணமடைந்துள்ளார்.
இறக்கும் போது அவருக்கு 68 வயதாகும்.
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து கடந்த மே 22ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே 27 ஆம் திகதி மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனையில் அவருக்கு மீண்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நோய்த் தொற்று தீவிரமடைந்த நிலையில், குறித்த தனியார் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், காலி, பத்தேகம, கொதட்டுவ ஸ்ரீபாதகொடெல்ல விகாரையின் விகாராதிபதியுமாவார்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாது தேரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ள பத்தேகம சமித தேரர், 2001 முதல் 2004 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
—
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 42 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (29) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,363 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 39 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,405 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் (29) 6 பேரும், மே 14 – மே 29 வரை 36 பேரும் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.