பாலியல் புகார்கள் போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்யும் உணர்ச்சி பிரச்சினைகளை உசுப்பிவிட்டு, கவனத்தை திசை திருப்புவதை விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் எச்சரிக்கையாக விலக்கி வைத்து, நேர்மையான விசாரணைக்கும், நியாயம் கிடைக்கவும் உதவ வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை: “பாலியல் புகார்களில் தொடர்புடைய அனைவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை பெருமாநகரில் பாரம்பரியப் பெருமை பேசும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ஜி.ராஜகோபால், பாலியல் புகார்களில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான பயிற்றுநர் பி.நாகராஜன் என்பவரும் பாலியல் புகாரில் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர்கள் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், இதில் குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் உறுதியான தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1997ஆம் ஆண்டில் விசாகாவில் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும், நிர்பயாவின் கொடூர நிகழ்வின் தொடர்ச்சியாக 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் குறைதீர்க்கும் சட்டமும் ஏட்டில் எழுதப்பட்ட எழுத்துகளாகவே நீடிக்கிறது. நீதிமன்றங்களின் அறிவுரைகள் நிர்வாக அமைப்புகளால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.பாலியில் சீண்டல்களும், வன்கொடுமைகளும் தடுக்கப்பட பணியிடங்களில் உள்ளக விசாரணைக் குழுக்கள் (Domestic Enquiry Comittee) அமைக்கப்பட வேண்டும், புகார்ப் பெட்டிகள் (Compliant Box) வைக்கப்பட வேண்டும் என்பதைப் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் அமலாக்கவில்லை.
மாவட்ட அளவிலும், பெருநகரங்களிலும் பொது இடங்களில் புகார்ப் பெட்டி வைக்கவும், இந்த நடைமுறையைத் தனியார் நிறுவனங்களில் செயல்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அக்கறை காட்டவில்லை என்பது முக்கியக் காரணமாகும். இதனால் நீதித்துறை உட்பட அரசின் அனைத்துத் துறைகளிலும் உயர் மட்டம் வரையிலும் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.
இது எல்லா மட்டங்களிலும் நிலவும் ஆணாதிக்க மேலாண்மையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்யும் உணர்ச்சி பிரச்சினைகளை உசுப்பிவிட்டு, கவனத்தை திசை திருப்புவதை விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் எச்சரிக்கையாக விலக்கி வைத்து, பாலின சமத்துவம் நோக்கி சமூகம் நகர்ந்து செல்லும் பண்பு வளர்ச்சிக்கு உதவும் முறையில் நேர்மையான விசாரணைக்கும், நியாயம் கிடைக்கவும் உதவ வேண்டும்.பாலியல் புகார்களில் கைதாகியுள்ள ஜி.ராஜகோபால், பி.நாகராஜன் ஆகியோரின் குற்றச்செயலுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் அவ்லியுறுத்தியுள்ளார்.