வெங்கட் பிரபு தயாரித்துள்ள ‘விக்டிம்’ ஆந்தாலாஜி ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆந்தாலஜி பாணியிலான படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு முன்னணி இயக்குநரும் ஆந்தாலஜி கதையில் களமிறங்கினார்கள்.
இதில் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ஆந்தாலாஜி ‘விக்டிம்’. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், ராஜேஷ், ரஞ்சித் ஆகியோர் ஆளுக்கொரு கதையை இயக்கியுள்ளனர். எந்த இயக்குநரின் கதையில் யார் நடித்துள்ளார்கள் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த ஆந்தாலஜி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படாமல் உள்ளது. முதலில் திரையரங்கில் வெளியிடலாம் என்றே திட்டமிட்டு இருந்தது படக்குழு. மேலும், இந்த ஆந்தாலஜியின் வெளியீட்டு உரிமையை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தற்போது கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளன. இதில் ‘விக்டிம்’ ஆந்தலாஜியும் இணைந்துள்ளது. இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.புதிதாக 10 படங்களின் டிஜிட்டல் உரிமையுடன் சோனி லைவ் ஓடிடி தமிழில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காகப் பல்வேறு படங்களின் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது சோனி லைவ் நிறுவனம்.