போதைவஸ்து பாவிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இவ்வகையான பாவனைகளுக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். அது மாத்திரமின்றி போதைப் பாவனையால் அவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை உண்டாகும் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
காரைதீவுப் பிரதேச கரைவலை மீனவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அத்தியாவசியமான தேவைக்கு மாத்திரம் வழங்கப்பட்ட அனுமதிகளை முறைகேடாக பாவித்துக்கொண்டு வீதிகளில் உலாவித்திரிவது, கடற்கரையில் அமர்ந்து அரட்டையடிப்பது போன்ற விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும். மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் கொரோனா தொற்று காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ,மீனவர்கள் சுகாதார தரப்பினருக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புகள் , தொடர்பில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர் கே. ஜெமீல் ஆகியோர் மீனவர்களுக்கு விளக்கமளித்தனர்.
——-
தீப்பிடித்த X-Press Pearl கப்பலை உடனடியாக ஆழ் கடலுக்கு கொண்டு செல்ல உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மே மாதம் (09) ஆம் திகதி அன்று புறப்பட்ட குறித்த கப்பல், கடந்த மே 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே வந்ததைத் தொடர்ந்து, நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விபரித்தார்.