1983இல் வால்டர் டேவிஸ் எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய நாவலின் திரைவடிவமே இந்தத் தொடர். குயின்ஸ் கேம்பிட் என்பது சதுரங்க விளையாட்டிலிருக்கும் ஒருவகை தொடக்க நகர்வு. 1950-களின் மத்தியில் தொடங்கி 1960-கள் வரை நீளும் இந்தக் கதை, சதுரங்க விளையாட்டில் உச்சம் தொட்ட பெத் ஹார்மன் எனும் ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தத் தொடர், நான்கு வாரத்துக்குள்ளாகவே உலகில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட தொடர் என்கிற சாதனையை நிகழ்த்திவிட்டது.
ஒரு மோசமான கார் விபத்தில் தாயைப் பறிகொடுத்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து, ஆதரவற்று நிற்கும் ஒன்பது வயது பெத் ஹார்மனுடன் தொடங்கும் இந்தத் தொடர், சதுரங்கத்தில் உலகையே வென்று, மக்களின் பேரன்போடு உயர்ந்து நிற்கும் பெத் ஹார்மனுடன் நிறைவு பெறுகிறது.
வாழ்வின் விசித்திரத்தை உணர்த்தும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடையிலிருக்கும் காலகட்டத்தில், ஆதரவற்றோரின் வலி, இனவெறியின் அவலம், அமெரிக்க- சோவியத் பனிப்போர், இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் நிலையிலிருப்பவரின் போராட்ட குணம், சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்கள், போட்டியாளர்களின் வாழ்வியல் முறை எனப் பல அம்சங்கள் இந்தத் தொடரில் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. வாழ்வில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று வெல்லும் திறன் நம் அனைவரிடமும் உண்டு எனும் நம்பிக்கையை இந்தத் தொடர் நம்முள் ஆழமாக விதைக்கிறது.
சதுரங்க விளையாட்டை விளையாடுவதற்கு மட்டுமல்ல; பார்ப்பதற்கும் கூர்மையான மதியாற்றல் தேவை. நமது சிந்தனையின் வீச்சைச் சவாலுக்கு அழைக்கும் அந்த விளையாட்டு நம்முடைய பொறுமையின் எல்லையைச் சோதிக்கும். அத்தகைய சிக்கலான விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணையத்தொடரை உருவாக்குவதற்கு அசாத்தியத் திறமையும் அபரிமிதமான நம்பிக்கையும் தேவை.இந்தத் தொடரை இயக்கியிருக்கும் ஸ்காட் ஃபிராங்கிடம் அவை தேவைக்கும் அதிகமாகவே உள்ளன. சுமார் எட்டு மணிநேரத்துக்கு மேல் நீளும், ஏழு பாகங்கள் கொண்ட இந்தத் தொடரை நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகுந்த விறுவிறுப்புடன் படமாக்கி நம்மை அவர் வியப்பில் ஆழ்த்துகிறார்.