நடிகராகவும், இயக்குநராகவும் முயற்சி செய்து வருபவர்களுக்குப் பயன்படும் விதமாக 10 நாட்கள் ஆன்லைன் வகுப்பு தொடங்கவுள்ளதாக இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
‘வெண்ணிலா கபடிக் குழு’ மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த வருடம் பொங்கல் தினத்தன்று இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது. ஈஸ்வரனுக்கு முன்னரே ஜெய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை சுசீந்திரன் வெளியிட்டார். இதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன். 2021 இந்த ஆண்டில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி திரைப்பட உலகில் உதவி இயக்குநர்களாக வேலை செய்பவர்களுக்கும், உதவி இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்பவர்களுக்கு மற்றும் நடிகர்களாக நடித்து கொண்டிருப்பவர்களுக்கும், நடிகர்களாக முயற்சி செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் படி திரைப்பட ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆன்லைன் வகுப்பு உதவி இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் நடத்துவதற்கான காரணம் ஒரு இயக்குனருக்கு நடிப்பு என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு நடிகருக்கும் அந்தப் படத்தினுடைய பங்கு, கதையின் பங்கு, இயக்குனரின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இரண்டு வகுப்பையும் ஒன்றாக நடத்துகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வகுப்பை கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இவ்வகுப்பு பயனுள்ளதாக இருக்குமென உறுதி கூறுகிறேன்.
இந்த வகுப்பு மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் ஜூன் 14. 6. 2021 முதல் 25. 6 . 2021 வரை நடைபெறும். இடையே வரும் சனிக்கிழமை 1.9 6 .2021 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 20. 6. 2021 இரண்டு நாட்கள் விடுமுறை. வகுப்பின் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை. இவ்வகுப்பின் 11 ஆம் நாள் அன்று உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அறிவிக்கப்படும்.. இவ்வகுப்பிற்கான கட்டணம் ரூபாய் 1000.
இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நான் அடுத்து இயக்கும் திரைப்படங்களில் உதவி இயக்குனர், நடிகர்களின் நேர்காணல் நடைபெறும் போது இந்த வகுப்பின் சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வகுப்பின் மூலமாக வரும் முழு பணத்தையும் கொரோனா தடுப்பு தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்படும் என்று சுசீந்திரன் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் போல சுசீந்திரனின் இந்த அறிக்கையும் அவர் கைப்பட எழுதியே வெளியாகியுள்ளது.