இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக மேல், தென் கடற்கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கரையொதுங்கி வருகின்றமை பதிவாகியுள்ளன.
இதுருவ, கொஸ்கொட, வாதுவை, தெஹிவளை, பயாகலை ஆகிய பிரதேசங்களின் கடற்கரைப் பகுதியில் 6 ஆமைகளும் டொல்பினொன்றும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கொஸ்கொட கடற்கரையில் 3 ஆமைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதோடு, அவை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும், அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பயவு நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் காலி, உணவட்டுன கடற்கரையில் கரையொதுங்கிய ஆமை தொடர்பில் அறிக்கை வழங்குமாறு, அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்திற்கு காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததோடு, அது தொடர்பான ஆய்வுகளை பேராதனை பல்கலைக் கழக்த்தின் மிருகவியல் மருத்துவ பீடமும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தீ விபத்திற்குள்ளாகி, மூழ்கி வரும் X-Press Pearl கப்பலிலிருந்து வெளியான எரிந்த மற்றும் எரியாத பிளாஸ்திக் பொருட்கள் உள்ளிட்ட பல தொன் கழிவுகள் கடலில் கலந்து கரையொதுங்கி வரும் நிலையில், இச்சம்பமானது, அதனுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என, சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.