வெற்றிமாறன் கூறிய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் தனுஷ். இந்த மாதம் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், மீண்டும் கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் தனுஷ்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது திரையுலகப் பயணம், படங்கள் உள்ளிட்டவை குறித்து நீண்ட பேட்டியளித்துள்ளார் கார்த்திக் நரேன்.
அவரது முதல் படம் முடிந்தபிறகு ஒரு பொது நிகழ்ச்சியில், இயக்குநர் வெற்றிமாறன், உடனடியாக அடுத்த படம் எடுக்க வேண்டாம் என்றும், இன்னும் பயணப்பட்டு, சினிமாவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அப்போது, அவர் சொல்வதை நான் மதிக்கிறேன். ஆனால், எல்லாருக்குமே அவர்களுக்கென ஒரு பயணம் இருப்பது போல எனக்கும் இருக்கிறது என்று பதில் சொல்லியிருந்தார். இப்போது வெற்றிமாறனின் அறிவுரையை எப்படிப் பார்க்கிறார் என்று கேட்டதற்கு கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:
”பள்ளி, கல்லூரி படிக்கும் நேரத்தில் நமது ஆசிரியர் சொல்லும் அறிவுரையைப் போலத்தான் இப்போது அது தோன்றுகிறது. அப்போது இது என்ன மாதிரியான அறிவுரை, இதையெல்லாம் பின்பற்றாமல் நம் வழியில் போக வேண்டும் என்று புரட்சிகரமாக யோசிப்போம். பிறகு அனுபவம் கிடைக்கும்போது அந்த அறிவுரையை நாம் கேட்டிருக்க வேண்டும் என்று உணர்வோம். வெற்றி மாறனின் அறிவுரையும் அப்படித்தான். இப்போது வாய்ப்பிருந்தாலும் அந்த அறிவுரையின்படி நடப்பேன். முக்கியமாக ’மாஃபியா’ படத்துக்குப் பிறகு அதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன்.
‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ எல்லாம் என் வாழ்க்கையில் நான் பார்த்த, கேட்ட விஷயங்களை வைத்து எடுத்தேன். எனவே அது திரையில் வரும்போது மக்களாலும் அதை உணர முடிந்தது என்று நினைக்கிறேன். ‘மாஃபியா’ படத்தில் அதை நான் செய்யத் தவறிவிட்டேன். ‘நரகாசுரன்’ தள்ளிப்போனபடியே இருந்ததால் ஒரு கட்டத்தில் எனக்கே வெறுப்பாக ஆரம்பித்தது. மீண்டும் படம் இயக்கியே ஆக வேண்டும் என்றுதான் மனதில் ஓடியது. சற்று அவசரமாக ‘மாஃபியா’வை எடுத்துவிட்டதாக நினைக்கிறேன்.
இதுவரை என் திரை வாழ்க்கையில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது, ஒரு படம் தோல்வி பெற்றிருக்கிறது, ஒரு படம் தயாராக இருந்தும் வெளியாகவில்லை. எல்லாவற்றையும் முதல் முறை சந்தித்திருக்கிறேன். என்னை ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கிறார் என்று பல நாட்கள் சொல்லி வந்ததும் ஒரு கட்டத்தில் என்னை பாதித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு படம் வெளியாகியிருந்தால் இப்படிச் சொல்வார்களா என்று நினைத்து, உடனே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ‘மாஃபியா’ எடுத்தேன்”.
இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.