மதுரையில் கடந்த ஒரு வாரமாக கரோனா புதிய தொற்று பாதிப்பு வேகமாகக் குறையும் நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மொத்த கரோனா பாதிப்பு மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலையில் முதல் உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்தது. ஒட்டமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துப்போய் இருந்தநிலையில் மதுரையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது.
ஆனால், அதன்பிறகு சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மதுரையில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது ஆண்டு கரோனா பாதிப்பு மதுரை அதிகம் பாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கும் அளவிற்கு ஒரு கட்டத்தில் சென்னைக்கு இணையாக தொற்று பரவல் அதிகரித்தது. வீட்டிற்கு வீடு தொற்று ஏற்பட ஆரம்பித்தது.
உயிரிழப்பும் தினசரி 15 முதல் 18 இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனாலேயே, மதுரையில் இரண்டு பெரிய மயானங்களில் 24 மணி நேரமும் கரோனாவில் உயிரிழந்தவர்களை எரித்தாலும் உடல்களை எரிக்க வரிசை முறை கடைபிடிக்கும் அவலம் ஏற்பட்டது.படுக்கைளுக்க அருகே நடக்கும் மரணங்களால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மனதளவில் பலவீனமடைந்தனர். பலர் வீடுகளில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தனர். ஆக்சிஜன் கிடைக்காமல் தினமும் பலர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவியதால் மதுரையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
கடந்த ஒரு வாரமாக மாவட்ட அமைச்சர்கள், எம்.பி, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியால் தொற்று பரவல் நன்றாக குறையத்தொடங்கியது. குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப்போரை கட்டுப்படுத்தினர். ஒருவர் மட்டுமே நோயாளிகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.
தொற்று ஏற்பட்ட பகுதிகளை அடைத்து அங்கிருந்து நோயாளிகள் மற்றப்பகுதிகளுக்கு செல்லாதவாறு கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை மாநகராட்சி, மற்ற பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் விவசாயத்துறையினருடன் கைகோத்து தேடிச்சென்று கொடுத்தனர்.அதனால், தினமும், 1500 முதல் 1700 பேருக்கு தொற்று ஏற்பட்ட மதுரையில் தற்போது சராசரியாக 300 முதல் 400 ஆக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 365 ஆக குறைந்தது. நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை, சாதாரண படுகைகள் கிடைக்காமல் தடுமாறும் நிலை இல்லாமல் தடையில்லாமல் சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், உயிரிழப்பு மட்டும் இன்னும் குறையவில்லை. இதுவரை இந்த இரண்டாவது அலையில் மதுரை மாவட்டத்தில் 68,648 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 38,025 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9,671 பேர் சிகிச்சையில் உள்ளனர். 988 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்று வேகமாகக் குறைவதால் மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமில்லாது பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.அதனால், வீட்டிற்கு வீடு தொற்று இருந்தநிலை மாறி ஒவ்வொரு பகுதியில் சிலருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. ஒரிரு வாரத்தில் அதுவும் குறைந்து நூற்றுக்கு கீழ் வர வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.