தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ‘ஜகமே தந்திரம்’ படம் தொடர்பாக பேசும் போது தயாரிப்பாளர் சசிகாந்த் “பல்வேறு மொழிகளில் பிரம்மாண்ட முறையில் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைப் போலவே, தற்போது தயாரிப்பு தரப்பிலிருந்து புதிய ‘ஜகமே தந்திரம்’ போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலீஷ், போர்ச்சுகீஷ், பிரேசிலியன், ஸ்பெனீஷ் – ஜேஸ்டிலியன், ஸ்பெனீஷ் – நியூட்ரல், தாய், இந்தோனேஷியன் மற்றும் வியட்நாமீஷ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்.தமிழில் ஒரே சமயத்தில் இவ்வளவு மொழிகளில் வெளியாகும் முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ இருக்கும் என்று கூறப்படுகிறது.