யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் சுமார் 30 அடி திமிங்கிலம் நேற்று (15) கரை ஒதுங்கியது.
குறித்த கடற்பரப்பில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்றுக் காலை கரைக்கு திரும்பும் போது இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்குவதை அவதானித்தனர்.
இலங்கையில் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்னர் இரசாயன பதார்த்தங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை தொடர்ந்து இவ்வாறு உயிரினங்கள் பல இடங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது குறிப்பிடத்தக்கது.
தீப்பிடித்த MV X-Press Pearl கப்பலின், உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் CID யினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் வைத்து தீப்பிடித்த குறித்த கப்பலின் முகவர் நிறுவனத்தின் (SETMIL/X-Press Feeders) தலைவரான அர்ஜுன் ஹெட்டியாரச்சி, இன்று (16) முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கப்பலின் கெப்டன் அண்மையில் பிணை விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.