வட்டவளை மற்றும் கரோலினா பகுதியில் தொழில் மற்றும் வருமானமற்ற சுமார் 50 பேர் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தாம் தோட்டத்தின் உள்ளே வாழ்ந்தாலும் தாம் தோட்டத்தில் பணிபுரியவில்லை என்றும் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளை செய்தே தமது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் தமது கணவர்மாறும் கொழும்பில் தொழில் செய்த நிலையில் அவர்களுக்கும் தொழில் மற்றும் வருமானம் அற்ற நிலையில் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோலினா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் ஹற்றன் – – கொழும்பு பிரதான வீதியின் ஓரத்தில் இவர்கள் தமது கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். தமது தேவைகள் என்ன என்பதை அறியாத எமது அரசியல்வாதிகள் கொரோனாவை காரணம் காட்டி ஹொங்கோங் நாட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் தேர்தலுக்கு வாக்கு கேட்கும் போதும் மட்டும் ஐயா சாமி மலையகம் என எம்மிடம் வந்து வீட்டில் உள்ள ரொட்டியையும் சாப்பிட்டு செல்லும் அரசியல்வாதிகள் இவர்கள் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில். நான் இன்றைக்கு பக்கத்து வீட்டில் இரண்டு சுண்டு அரிசியை பெற்றுக் கொண்டேன் எனது பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்காக தினமும் இவ்வாறு அடுத்தவரிடம் கையேந்த முடியுமா? எனவே அரசு கொடுக்கவேண்டிய ரூபா 5000 பெற்றுக் கொடுக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
எல்லோரும் வந்து உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என வந்து வாக்கு கேட்கின்றனர் அதில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற பிறகு மக்கள் இருக்கின்றனரா இல்லையா எனபது அவர்களுக்கு தெரியாது இந்த நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வருவதில்லை நாம் இருக்கோமா சாப்பிட்டோமா என்று பார்ப்பதில்லை அப்படியானால் ஓட்டுக்கு மட்டுமா நாம் தேவை என்று கேள்வி எழுப்பினர்.
வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் கூட மலையகத்திற்கு வந்து உதவுகின்றனர். ஆனால் மலையக அரசியல்வாதிகள் எங்கே என்று தெரியவில்லை. சொகுசு வாகனங்களில் பயணிக்கின்றனர். ஆனால் எம்மை பார்ப்பதில்லை. எமக்கு இந்த பாதையை திறந்து விட்டால் போதும் என்று கோரிக்கை விடுத்தனர்.