16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.கவர்னர் தனது உரையை, “வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், “தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் மேலும் கூறியதாவது;-
அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.
ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். `உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.
விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்
100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும்.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்; அதை இந்த அரசு உறுதி செய்யும்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என கூறினார்.
சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் கொண்டுவரப்படும்
ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனிவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது
2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்
வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்.
“ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.
லோக் ஆயுக்தவுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும்.
OBC இடஒதுக்கீட்டில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை.
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்.
அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற மாபெரும் சமூக தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்
மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும், முழுமையாக பயனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்
வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம் என கூறினார்.