மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் மலையாள படம் ரூ.100 கோடி செலவில் தயாராகி உள்ளது. அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து கொரோனா பரவலால் முடங்கியது. இதுபோல் திரைக்கு வர தயாராக இருந்த பகத் பாசிலின் மாலிக், நிவின் பாலி நடித்துள்ள துறைமுகம், துல்கர் சல்மானின் குரூப், பிருதிவிராஜின் குருதி, ஆடு ஜீவிதம் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
இந்த நிலையில் மோகன்லாலின் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தை ஆகஸ்டு 12-ந் தேதி கேரளா முழுவதும் 600 தியேட்டர்களில் 3 வாரங்கள் தொடர்ச்சியாக திரையிடுவது என்றும், அந்த 3 வாரமும் வேறு எந்த படங்களையும் திரையிட வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன. ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க ஒரு பெரிய படம் தேவை என்று இந்த முடிவை எடுத்துள்ளன. இது ஒருதலைப்பட்சமான முடிவு என்று மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.