விஜய்யுடன் இணைந்தால் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் படம் பண்ணுவேன் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் திரையுலக பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கரோனா தொடர்பான தடுப்பூசி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தி வந்தார்கள்.
இந்த ஊரடங்கு சமயத்தில் மிகவும் பிரபலமானது ட்விட்டர் ஸ்பேஸ் மற்றும் க்ளப் ஹவுஸ். தினமும் பிரபலங்கள் இதில் ரசிகர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகிறார்கள். நேற்று (ஜூன் 22) ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குநர் மிஷ்கின்.
அதில் பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாகவே பதிலளித்து வந்தார் மிஷ்கின். “விஜய்யுடன் இணைந்தால் எந்த மாதிரியான பாணியில் படம் பண்ணுவீர்கள்?” என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, “நல்ல ஸ்டைலான ஸ்பை த்ரில்லராக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இருக்கும்” என பதிலளித்தார் மிஷ்கின்.
மேலும், ‘யூத்’ படத்தில் விஜய்யின் அர்ப்பணிப்பைப் பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராக மிஷ்கின் பணிபுரிந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு “ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று பதிலளித்துள்ளார் மிஷ்கின்.