சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டுச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்கு ஆர்வம் காட்டியது. ஆனால், அதில் தான் சிக்கல் ஏற்பட்டது. டிஜிட்டல் உரிமையுடன் இணைந்து தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவிக்கு கேட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
ஆனால், தயாரிப்பு நிறுவனமோ தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு கொடுத்துவிட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், அதற்குள் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், ‘டாக்டர்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மத்தியில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.