மணமக்களை வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றப்பிறகு, தன்னை சந்திக்க வருபவர்கள் யாரும் பொன்னாடை, மலர் கொத்துகள் தரவேண்டாம் என்றும், அறிவாற்றலை பெருக்கும் புத்தகங்களை மட்டும் தாருங்கள் என்றும் அன்பு வேண்டுகோள் வைத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, அவரை சந்திப்பவர்கள் புத்தகங்களை மட்டும் கொடுத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினை சந்திப்பவர்கள் கொடுக்கும் நூல்கள், புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டு, நூலகங்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர். இதனால் அதனை பேணி பாதுகாப்பதற்கு அவர் ஒருபோதும்தவறியது இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தமிழக அரசின் மூலமாக ஒரு பக்கம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், தானும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து வலியுறுத்துவதையும், மரம் வளர்ப்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதற்கு பின்னர், கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சிகளில் துளசி, புங்கன், கற்பூரவள்ளி, பாரிஜாதம் உள்ளிட்ட கன்றுகள் அடங்கிய பசுமை கூடையை மணமக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.
அந்தவகையில், திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா-ராகவேந்திரகுமார் என்ற ரோகித் ஆகியோர் திருமணம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், மணமக்களுக்கு மரக்கன்று பசுமை கூடையை வழங்கி, வாழ்த்தினார். தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் டுவீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
மகளின் திருமணத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம். இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி என்றார்.