அரசியல் கைதிகள் விடயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோமென்று செய்துவிடமுடியாது. அதற்கென்று ஒரு வரைமுறையுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு முன்னெடுக்கப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமராட்சி முள்ளிப்பகுதியில் அமைக்கப்பட்ட சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசியல் கைதிகள் தொடர்பில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. அதற்கென்று ஒரு வரைமுறை உள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு அது முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.
காணாமல் போனோர் விடத்தை ஊடகங்களின் முன் தெரிவித்து அரசியலாக்க கூடாது. இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் 88, 89 மற்றும் 83 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பில் தெற்கிலும் பேசப்படுகிறது.
இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரச தரப்பும் இணைந்து ஒரு கிரமமான தீர்வை இதற்கு காண வேண்டும் என தெரிவித்தார்.