‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ திரைப்படம் கரோனா தொற்று காலகட்டத்திலும் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட்டின் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட வரிசையில் இறுதியாக வெளியாகியுள்ள படம் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு மே மாதம் தென்கொரியாவில் முதலில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த வெள்ளி அன்று (ஜூன் 25) வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் உலக அளவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வட அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ மாறியுள்ளது. இதுவரை வட அமெரிக்காவில் மட்டுமே 4000 திரையரங்குகளில் வெளியாகி 70 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. கரோனா காலகட்டத்தில் இது மிகப்பெரிய சாதனை என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு ‘எ கொயட் ப்ளேஸ் 2’ படம் தான் 48.3 மில்லியன் டாலர்கள் வசூலித்து கரோனாவுக்குப் பிறகு வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அந்த சாதனையை ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ முறியடித்துள்ளது.