பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரவுத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் ஜூன் 21 மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது, அதன் திட்டமிடப்பட்ட தேதியான அக்டோபர் 13 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். ராம்சரணின் (அல்லூரி சீதாராம ராஜூ) ஜோடியாக அலியாபட் நடிக்கிறார். அவரது பாடல் காட்சிகள் ஜூலை மாதம் எடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் அது முடிவடையும்.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு, படம் குறித்த முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2 பாடல் காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் 2 மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விடுவார்கள் எனவும் படக்குழு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.