பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் கூறுகிறார், ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி காட்டமாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முஸ்லிம்கள் பற்றி அதிகம் கவலைப்படுகிறது, வாக்கு வங்கி அரசியலுக்காகச் செயல்படுகிறது என்று சிலர் பேசலாம்.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஜனநாயகத்தை முழுமையாக நம்புகிறது. இங்கு இந்துக்கள், முஸ்ஸில்கள் ஆதிக்கம் என்பதைவிட இந்தியர்கள் ஆதிக்கம் என்ற நிலையைத்தான் விரும்புகிறோம்
பெரும்பான்மை சமூகத்தினர் என்ற அச்சம் இந்தியாவில் அதிகரிக்கிறது. ஆனால், நான் கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், வெறுப்பைக் காட்டினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போது, பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும்.
பசு புனிதமான விலங்கு. ஆனால், சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது. சிலர் மீது பொய்யான வழக்குகளும் கூட தொடரப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். இந்தியர்கள் அனைவரும் நமது முன்னோர்கள் வழி வந்தவர்கள்தான். இந்து-முஸ்லிம் ஒற்றுமை தவறாக முன்னெடுக்கப்படுகிறது, இருவரும் ஒன்றுதான்.
இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முஸ்லிம்கள் அச்சப்பட வேண்டாம். மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். மக்களை ஒன்றிணைக்கும் பணியை அரசியல் கட்சிகளிடம் விட முடியாது, அவர்களை மக்களை இணைக்கும் கருவியாக செயல்பட முடியாது, சில நேரங்களில் சிதைக்கவும் செய்யலாம்.
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம். ஒற்றுமையின் அடிப்படை என்பது தேசியவாதமும், நம்முன்னோர்களின் புனிதமும்தான். இந்து-முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது பேச்சுவார்த்தை மூலம்தான் முடியும்.
உங்கள் முன்னோர்களை இந்துக்கள் என அழைக்கவிரும்பாவிட்டால், இந்தியர்கள் என அழையுங்கள். ஆனால், வார்த்தைகள் மூலம் வேறுபாட்டை மறந்து, நாட்டுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
இதற்கு பதில் தெரிவித்து அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின்(ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் கூறுகிறார்.இந்த கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மடடும் தெரிகிறது.
கலவரம் செய்வது, கொலை செய்வது போன்றவை தான் கோட்ஸே இந்துத்துவா சிந்தனை. இதன் விளைவாக தான் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.