ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பை கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். கொரோனா பரவல் மற்றும் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து முடங்கியது.
தற்போது விக்ரம் என்ற படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி உள்ளார். ஷங்கரும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. ஆனால் ஷங்கர் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து ராம்சரண் படத்தை இயக்கும் பணியில் ஷங்கர் தீவிரமாகி உள்ளார். ராம் சரண், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ ஆகியோர் சென்னை வந்து ஷங்கரை சந்தித்து படப்பிடிப்பை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.