ஊடக அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை நிறுத்தக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று சபையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,
மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திவரும் தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றை அடக்குவதற்கும் அதன் அனுமதி பத்திரத்தை தடைசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த ஊடகம் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதுடன் நாட்டின் தற்போது கொவிட்19 காரணமாக மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினை, உரம் கிடைக்காததால் விவசாயிகள் வீதிக்கிறங்கி மேற்கொள்ளும் போராட்டங்களை வெளிப்படுத்தி அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வருகின்றது.
இவ்வாறு இந்த தனியார் ஊடகம் ஆளும், எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டங்களையும் மக்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் பக்கச் சார்ப்பின்றி வெளியிட்டு வருகின்றது. இவ்வாறு செயற்பட்டுவரும் ஊடக நிறுவனத்தை அடக்கி, அதன் ஊடக அனுமதி பத்திரத்தை தடைசெய்ய அரசாங்கத்திலிருக்கும் சிலர் செயற்பட்டு வருவதை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். அதனால் அரசாங்கம் அவ்வாறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை யென்ற உத்தரவாதத்தை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், மஹாராஜா நிறுவனத்தை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக எதிர்க்கட்சி தலைவர் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இந்த விடயம் உண்மையா, இல்லையா என்பது தொடர்பில் ஆளுங்கட்சி பிரதம அமைப்பாளர் பதில் சொல்லவேண்டும் என்றார்.