பிரான்சில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான 20 சொத்துகளை முடக்க அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து உள்ளது.
இந்த நிலையில், 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்திய அரசு தர வேண்டும் என, கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்து உள்ளது. அத்துடன் இந்தியா, தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில், இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பிளாட்கள் எனவும், இவற்றின் மதிப்பு 20 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி கெய்ர்ன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், இந்தியாவிற்கு சொந்தமான சொத்துகளை முடக்க உத்தரவிட்டதாகவும், அன்று மாலையே அதற்கான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், பிளாட்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் எண்ணம் அந்த நிறுவனத்திற்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அந்த சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாது என கூறப்படுகிறது.
பிரான்சில் கெய்ர்ன் எனர்ஜி சுமார் 20 இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும், உத்தரவும் பிரான்ஸ் நீதிமன்றத்திலிருந்து கிடைக்க வில்லை என கூறி உள்ளது.
அரசாங்கம் உண்மைகளை அறிய முயற்சிக்கிறது, அத்தகைய உத்தரவு கிடைக்கும்போதெல்லாம், இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க, அதன் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் 2020 சர்வதேச நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து அரசு ஏற்கனவே 2021 மார்ச் 22 அன்று ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. நீதி மன்ற நடவடிக்கைகளில் இந்திய அரசு தனது வழக்கை தீவிரமாக கவனிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கெய்ர்ன்ஸ் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக இந்திய அரசை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.