இன்றைய சூழலில் எல்லாத் துறைகளிலும் போட்டியும், மன அழுத்தமும் நிறைந்திருக்கிறது என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
தமிழில் ’ஆடுகளம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான டாப்ஸிக்கு பாலிவுட்டில் தொடர் வெற்றிகள் கிடைத்தன. இன்று பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக டாப்ஸி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ’ஹஸீனா தில்ருபா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகியுள்ளது.
பாலிவுட் வாழ்க்கை, போட்டி பற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் டாப்ஸி பேசியுள்ளார்.
“இது அதிகப் போட்டிகள் நிறைந்த துறை. எல்லாத் துறைகளைப் போலத்தான். என்ன நமது போட்டியாளர்கள், கேமராவுக்கு முன், உலகம் தங்களைத் தீர்மானிக்க நிற்பார்கள். அதனால் கொஞ்சம் மன அழுத்தமும் சேர்ந்துகொள்கிறது. ஆனால், எல்லோருக்குமே இது தெரியும். தெரிந்துதான் துறைக்குள் நுழைகின்றனர்.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. கேமராவுக்கு முன் நிற்போம், மக்கள் நம்மைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள நினைப்பார்கள் என எல்லா விஷயங்களும் புரிந்துதான் வருகிறார்கள். ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் நிபந்தனையற்ற அன்புக்கு ஒரு வகையில் நாங்கள் கொடுக்கும் விலை இது என்று வைத்துக் கொள்ளலாம். அதுதான் மன அழுத்தத்தைக் கொண்டு வருகிறது. போட்டி நிறைந்த எல்லாத் துறைகளிலும் இது சகஜமே.
ஒவ்வொரு துறையிலும் போட்டி அதிகமாக இருக்கிறது. போட்டியும், மன அழுத்தமும் இன்றி எந்தத் துறையும் இல்லை” என்று டாப்ஸி பேசியுள்ளார்.