ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி யார் செயற்பட்டாலும் தராதரங்கள் பார்க்காது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அவ்வாறு செயற்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானபோது, நேற்று முன்தினம் 37 பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தராதரம் எதுவாக இருந்தாலும் சட்டத்தை மீறினால் அதற்கு இடமளிக்க முடியாது. தற்போது கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரே தடை செய்துள்ளார். அவரே பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய அவருக்கு அந்த உத்தரவை செய்யலாம். அந்த உத்தரவையே பொலிஸார் செயற்படுத்துகின்றனர். இதன்படி கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமாக இருந்தால் தராதரம் பார்க்காது அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவில், மக்கள் அதிகளவில் கூடும் பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகளால் கொவிட்19 தொற்றுப் பரவும் அபாயம் உள்ளது. அதனால் அவ்வாறாக மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாதென்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அவர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

—–

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக் கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகுமென முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவரின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் நிதியமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் அநேகமாக நாளாந்தம் எனது அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு நான் பொலிஸாருக்கு அழைப்புவிடுக்கவில்லை. மாறாக போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். சில சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக்கூட இருக்கலாம்.

ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts