ஹாலிவுட் நடிகர் மேட் டேமன் ‘அவதார்’ படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது குறித்துப் பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டிலிருந்து சர்வதேச பிரபலம் பெற்றிருக்கும் நடிகர்களில் ஒருவர் மேட் டேமன். இவர் தயாரிப்பாளராகவும், கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ‘குட்வில் ஹன்டிங்’, ‘ஸேவிங் ப்ரைவேட் ரயன்’, ‘ஓஷன்ஸ் 11’ திரை வரிசை, ‘டிபார்டட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஜேஸன் பார்ன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த திரைவரிசை ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது,
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் மேட் டேமன் நடித்திருக்கும் ‘ஸ்டில்வாடர்’ திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் படம் முடிந்ததும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். இதை அங்கிருந்து ஏற்றுக்கொண்ட மேட் டேமன் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார்.
கான்ஸ் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக பயிற்சி வகுப்பு ஒன்றில் டேமன் பாடம் எடுத்தார். அதில் பேசுகையில் தனக்கு வந்த ‘அவதார்’ வாய்ப்பு, அதிக சம்பளம் குறித்துப் பகிர்ந்தார்.
“எனக்கு ‘அவதார்’ என்கிற சிறிய படத்தின் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சம்பளமாக படத்தின் லாபத்தில் 10 சதவிதம் தருவதாக ஜேம்ஸ் கேமரூன் கூறினார்.ஆனால் அவதார் படத்தை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால் நான் நடித்துக் கொண்டிருந்த ஜேஸன் பார்ன் திரைப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படி அந்தத் திரைவரிசையைக் கைவிடுவது நியாயமாக இருக்காது என்பதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்” என்று மேட் டேமன் பேசியுள்ளார்.
அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து அவதார் படத்தின் தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் உருவாகிறது என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு, ’மூன்று பாகங்களா? அடக் கடவுளே!’ என்று டேமன் ஆச்சரியப்பட்டார். மேட் டேமனுக்கு பதிலாக ஸாம் வொர்திங்க்டன் அவதார் படத்தில் நாயகனாக நடித்தார்.
திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்கிற பட்டியலில் ‘அவதார்’ பல வருடங்கள் முதலிடத்தில் இருந்தது. சில வருடங்களுக்கு முன் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ அந்தப் பெருமையை சில மாதங்கள் பிடித்திருந்தது.ஆனால் ‘அவதார்’ மறு வெளியீட்டின் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. கிட்டத்தட்ட 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை ‘அவதார்’ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்த 3 பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். இதில் கேட் வின்ஸெட், வின் டீஸல், மிஷல் யோ உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.