LTTE அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் 41 வயது நபர் ஒருவர் முள்ளியாவெளி தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நகுலேஸ்வரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2019 முதல் விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவது தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் கட்டாருக்கு தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில், சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனையடுத்து, கட்டாரில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டு, முள்ளியாவெளி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் TID யியனால் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.