அமரர் வல்வை. எஸ். ஜெயபாலசிங்கம்
வல்வையின் மகத்தான மாவீரன்..
புகழ் அஞ்சலி..
——
வல்வை என்றால் அந்த ஊரின் உயிர் தாங்கியே
வாழ்ந்து முடித்த எங்கள் அண்ணனே அருமை வரலாறே..
தாயக நெருப்பில் சுடர்த்த பத்தரை மாற்று பசும்பொன்னே..
கண் மூடி உறங்கும் வீரனே ஜெயபால சிங்கமே..!
தன் அபார சக்தியால் அனைத்திற்குமே ஒளி தந்தே
அற்புத மனிதனாய் உலவிய மாபெரும் மனித சக்தியே..
விளையாட்டு, நாடகம், மேடைப் பேச்சு அரசியல் சினிமா
என்றே எல்லாவற்றையும் தொட்டு ஏற்றம் தந்த மகத்துவமே..
எதை வளர்க்க அத்திவாரமிட வேண்டுமோ அதை எல்லாம்
வளர்ப்பதற்கே தன் வாழ்வை வழங்கி மகிழ்ந்த வள்ளலே..
இந்திய சிறைக் கொட்டடியில் கிடந்து துயர் சுமந்தாலுமே
பத்தாண்டுகளை பறி கொடுத்தாலும் இருண்டு போகாத பகலவனே..
வல்வை மீது நேசம் கொண்டே கையில் எடுத்த
புதுமைப் பணிகள் எல்லாம் தோளில் சுமந்த சுமைதாங்கியே..
வீசிய புயலைக் கண்டு ஓடிவிடாமல் உறுதியுடன் நின்றே
நீதியின் பக்கம் வெற்றியை அள்ளி கொட்டிய கடலலையே..
தவறின் பக்கம் போனால் என்றோ கோடிகளை குவித்திருக்கலாம்
ஏழ்மையே வந்தாலும் அநீதிக்கு துணை போகாத நேர்மையே..
தவறியவரை திருத்த வாழ்வெல்லாம் இழந்து போன தியாகமே..
நீதியும் வீரமும் அன்பும் கலந்து நெய்த பட்டாடையே..
புல்லின் தொங்கும் நீரின் துளியில் உலகம் தெரியும்
வல்வை என்ற சொல்லில் தொங்கும் நீரின் துளியே..
வல்வையின் வடிவத்தை உலகமாய் காட்டிய தமிழ் அழகே..
வல்வை உள்ளவரை வானில் பறக்குமே உன் புகழே..
இரண்டாயிரம் வருட இலக்கியத்தை சுவைத்தாலே தெரியும் இந்த
வீரன் சாதாரண பிறப்பல்ல சங்ககால சரித்திர மாந்தனென்று..
பூக்கள் சொரியும் தெருவில் புகழ் பயணம் சென்றவனே..
உன் போல் ஒருவன் இனி இப்புவியில் என்று வருவானோ..?
வீரர்கள் என்றுமே சாவதில்லை அவரை சரித்திரமாய் எழுதுவர்
இந்த வீரனை எழுதினாலோ அந்த சரித்திரமே சிலிர்க்குதே..
போகும் முன் போனெடுத்து இனி என்றுமே வெற்றிதானென
புன் முறுவலுடன் சொல்லிப் போன புறநானூற்று புகழே..
வாழ்ந்தால் இவனைப் போல வாழுங்கள் என்கிறதே வானம்
இவன் வரவால் விண்ணுலகோ பொன் முரசு கொட்டுகிறதே..!
புகழ்மிகு வீரர் எல்லாம் வானில் வரிசையாய் நின்றிடவே..
வானுலகே விழாக் கோலம் பூண்டே வரவேற்கிறதே உன்னை….
வல்வை தந்த மாவீரனே உனக்கு புகழ் அஞ்சலி..
நிலவைப் பார்க்கும் நாளெல்லாம் உன் முகமே தெரியுமே..
வானத்து வெள்ளி கூட்டத்தில் மின்னிடுமே உன் கண்கள்..
மாவீரனே உன்னை வாழ்த்தி அனுப்புகிறாள் பூமித் தாய்..
புகழ் தந்த பொன் மகனே வீர வணக்கம்
மனிதரில் மாணிக்கமே இனி நீயே எம் மாமனிதன்
இறவாப் புகழே எழிலே எங்கள் அண்ணனே தமிழே
சொன்ன பணி முடிப்போம் கவலை வேண்டாம் புறப்படு..
நீ கண்ட கனவெல்லாம் நனவாகும் இந்த மண்ணில்
தடை போட்ட அணைகள் எல்லாம் உடைக்கிறோம் இதோ…
தங்கு தடையின்றி பொங்கி பாயுதே உன் கனவுகள்
வீரத்திலகமிட்டு விடை தருகிறோம் உன் பிறப்பே வெற்றிதான்..
புகழ் மகனே சென்று வா..
மாவீரனே உனக்கேது மரணம்..
கி.செ.துரை ( டென்மார்க் )