மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி இடையூறு செய்ததை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, இது என்ன மாதிரியான மனநிலை என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை அவையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘நாடாளுமன்றத்தில் புத்துணர்ச்சி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பெண்கள், தலித், பழங்குடியிடி சமூகத்தினர் அதிகஅளவில் அமைச்சர்களாகியுள்ளனர். விவசாயம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது அமைச்சர்களாகியுள்ளனர்’’ எனக் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ‘‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இந்த நாட்டின் சாதாரண மக்கள் இன்று அமைச்சர்களாகியுள்ளனர். ஆனால் இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் புதிய அமைச்சர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கூட இடையூறு செய்கின்றனர்’’ எனக் கூறினார்.
பிரதமர் மோடி புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்யும்போது அவையில் கோஷம் எழுப்பியதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடுமையாக கண்டித்தார். ஆனால் அவையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்து பேசத் தொடங்கினார். ஆனால் அப்போதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அவர்கள் கோஷத்துக்கு இடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்ய அவையில் எனக்கு அனுமதி தந்ததற்கு மிக்க நன்றி. விவசாயிகளின் வாரிசுகள் இன்று மத்திய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் இதனையும் எதிர்க்கிறார்கள். பெண் அமைச்சர்கள், பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் அறிமுகம் செய்யப்படுவதை சிலர் எதிர்க்கிறார்கள்.
அவர்கள் புகழ் பெறுவதை காண சகித்துக் கொள்ள முடியாத இவர்களின் மனநிலை என்ன மாதிரியானது? இதுபோன்று இந்த அவையில் முதன்முறையாக நிகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.