ஆசீர்வாத வாழ்வைக் தரும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன்காலத்தில் தன்கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். சங்கீதம் 1:3.
இன்று வேதத்தை வாசிக்கும்படி யாரும் கூறினால் முதலில் நம்மில் பலர் ஆத்திரப்படுவது, கோபப்படுவது இயற்கை. ஆனால் அதை நேசிக்க ஆவல் ஏற்பட்ட பிற்பாடு அதை ஒருவரும் தடுக்க முடியாதுள்ளதை நாம் காண்கிறோம். இந்த இரு வேறுபட்ட அனுபவத்தை எங்களில் பலரிடத்தில் காணக்கூடியதாக உள்ளது. அந்த அனுபவங்கள் எப்படி மனிதர்களிடத்தில் வெளிப்படுகிறது என்பதை அலைகள் வாசக நேயர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு மனிதன் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கி படிக்கமுற்பட்டான். அதில் முன்பகுதியை மட்டும் வாசித்துவிட்டு அது சுவைஇல்லை என ஒதுக்கிவைத்து விட்டான். ஒரு சிலமாதங்களின் பின் ஒரு பெண்ணைச் சந்தித்தான். அவளுடன் பழகி, அவளை நேசித்து அன்பு செலுத்தினான். இறுதியில் அவளை தனது மனைவியாக்க விரும்பினான். அப்போது அவள் கவிதை எழுதுபவள் என்றும், தான் ஒதுக்கி வைத்தது அவளின் புத்தகம் என்பதையும் அறிந்து கொண்டான்.
உடனடியாக அதைத்தேடி எடுத்து ஒவ்வொரு கவிதைகளாக சுவைத்து வாசிக்க ஆரம்பித்தான். அதில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் தேன்போல் இனித்தது. அந்தக் கவிதைகள் அவனை ஒரு புது உலகிற்கு அழைத்துச் சென்றது. அதனால் அதற்கு ஓய்வு கொடுக்காமல் தினமும் திரும்பத்திரும்ப வாசித்தான். எந்தப் புத்தகம் அவனுக்கு சுவையும் ரசனையும் இன்றி இருந்ததோ, அதே புத்தகம் அவனுக்கு இனிமையான, அமைதியைத் தரும் புத்தகமாக மாறியது. அதன் இரகசியம் அவன் அந்த புத்தகத்தை நேசிக்கவில்லை, மாறாக அதை எழுதியவரை நேசிக்க முற்பட்டதுதான் காரணம்.
இந்த உண்மையை சங்கீதம் 1:1-3வரை வாசித்து நாம் அதை அறிந்து கொள்ளலாம். (1-2) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் (நிந்திப்பவர்கள்) உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். (3) அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன்காலத்தில் தன்கனியைத் தந்து, இலையுதிரா திருக்கிற மரத்தைப் போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
அதாவது நாம் கர்த்தரை முழுமனதோடு நேசித்தால் மாத்திரமே நம்மால் அவரின் வார்த்தைகளை நேசிக்க முடியும். நாம் அவரை உண்மையாய் நேசிக்காதவரை அவருடைய வார்த்தைகளை நேசிக்க முடியாது. இன்று அநேகமான மக்கள் தினசரி பத்திரிகைகள், வாரபத்திரிகைகள், கதைப் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றிற்கு பலமணி நேரத்தை செலவிடுவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் அர்த்தம் அவர்கள் அவற்றை நேசிப்பதுதான் காரணம்.
இன்று மக்கள் உலகத்தையும் அதன் இச்சைகளையும் நேசிப்பதனால், அதன் மாயைக்குள் (போலித்தனத்திற்குள்) அகப்பட்டு அதிக வேதனையை அனுபவிப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதனால் அதிக குடும்பங்கள் சிதைந்து உள்ளதையும், பி;ள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதையும், வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடுகள் அழிந்து வருவதையும் நாம் காணக் கூடியதாக உள்ளது.
இந்த சமுதாயத்தில் நமது வாழ்க்கையையும்;, நமது குடும்பத்தையும் அழிவில் இருந்து, கறைபடாமல் தேவனுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கவும், அதன்படி வாழவும் நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களே கர்த்தரின் பார்வைக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங்களாக காணப்படும். இதனைத்தான் முதல் இரண்டு வார்த்தைகளும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
வசனம் 3 இவ்வாறு கூறுகிறது. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன்கனியைத்தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். தேவனுடனான வாழ்வில் ”கனி” என்பது தேவனுடன் இணைந்து வாழும் ஓர் வாழ்க்கையும், அதனால் வெளிப்படும் தேவனின் தன்மைகளும் குணாதிசயங்களும் ஆகும்.
இதனை இயேசு இவ்வாறு கூறுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத் திராவிட்டால், கனிகொடுக்க மாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும்செய்யக்கூடாது. யோவான் 15:4
தேவனுடனான வாழ்வில் கனிகள் என்பது, சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் விளங்கும் (வெளிப்படும்). அவையாவன அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். என்பனவாகும். கலாத்தியர் 5:22.
இவ்வுலக வாழ்க்கையின் இறுதியில் நாம் எவ்வளவு காலம் ஜீவித்தோம், எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தோம் என்பதல்ல, மாறாக நாம் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு முன்பாக கனியுள்ள (தேவனின் தன்மையை வெளிப்படுத்தி) ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதே முக்கியமானதாகும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் ஏற்படலாம். அவைகள் இயற்கையானது. அத்தனைக்கு மத்தியிலும் தேவனுடைய தன்மைகளை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழும் வாழ்க்கையே தேவனில் பிரியமாக இருந்து கனி கொடுக்கும் வாழ்க்கையாகும். அந்த தேவனில் பிரியமாகவிருந்து, அவரைத்தியானித்து, கனிகொடுக்கிற வாழ்க்கை வாழ எம்மை ஒப்புக்கொடுப்போமா.
மகாஇரக்கமும், உருக்கமும் நிறைந்த தேவனே, உமக்குப் பிரியமாக இருந்து, உமது வேதத்தைத் தியானிப்பதன் மூலம் அடைந்து கொள்ளும் பெரிய ஆறுதலையும், உமது அன்பையும் இன்று அறிந்து கொள்ள உதவினீரே. அதற்கு நன்றி அப்பா. அந்த அன்பில் நிலைத்திருந்து உமக்குள் பெலனடைந்து, கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழ உதவி செய்து, என்னைக் காத்துக்கொள்ளும் படியாக இயேசுவின் நாமத்ததில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai, Rehoboth Ministries – Praying for Denmark