அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவுக்கு வருகிறார். 2 நாள் பயணமாக வருகிறார். பதவி ஏற்ற பிறகு, அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசுகிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்புகளின்போது பேசப்பட உள்ள விவகாரங்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு, இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது.
மேலும், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உற்பத்தி ஆகும் கொரோனா தடுப்பூசிகளை இந்ேதா-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அனுப்பி வைக்க ‘குவாட்’ ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. அதுபற்றியும் பேசப்படும்.
வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விவாதிக்கப்படும். ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்படும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ் பெறப்படுகின்றன. அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதையும், புகலிடம் அளிப்பதையும் நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொள்ளும்.
தற்போது, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடித்து வருகிறது. மாணவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், வர்த்தகர்கள், குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் ஆகியோரின் நன்மைக்காக கொரோனா விதிமுறைகளை பின்பற்றி படிப்படியாக சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குமாறு இந்தியா வலியுறுத்தும்.
கொரோனா மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வினியோகிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா வேண்டுகோள் விடுக்கும். தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், அமெரிக்காவில் இருந்து வினியோகிக்கப்படுகின்றன. அவற்றின் வெளிப்படையான, சீரான வினியோகத்துக்கு வழிவகுக்குமாறு இந்தியா கேட்டுக்கொள்ளும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைக்கு தடுப்பூசி உற்பத்தியை இந்தியா அதிகரிக்க உள்ளது. எனவே, மூலப்பொருட்களின் தேவை உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.