ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை, 14 நாட்களுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகிய நால்வரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் (26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.
அத்துடன் மரணித்த சிறுமியின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்ற நீதிமன்றம் அதற்கான அனுமதியையும் வழங்கி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயிரிழந்த 16 வயது ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கடமையாற்றிய 22 வயது யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.