தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தெரிவித்துள்ளார்.
2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் 4 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். இதே போல், அணி பிரிவிலும் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.
ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும், புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் 3 முறையும், வாலட் பிரிவில் 2 முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிமோன் பைல்ஸ், உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக கருதப்படுகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அணி பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஆல் ரவுண்டு தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுவதாக சிமோன் பைல்ஸ் அறிவித்துள்ளார்.
தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மன நலன் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிமோன் பைல்ஸின் முடிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்த ரசிகர்கள், அவர் விரைவில் மீண்டுவர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.