கொழும்பு நகரில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக நேற்று முன்தினம் 30 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கமைய முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேநேரம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றும் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், வன்கொடுமைக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்குட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433 333 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை தீக்காயங்களுடன் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கப்பட்ட பொது மயானத்திற்கு (27) பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.