இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை கடந்த 2019ம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.