தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய MV X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், இதுவரை 417 கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைகள்ளம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் திணைக்களம் இதனை தெரிவித்திருந்தது.
அதற்கமைய, 417 கடலாமைகள், 48 டொல்பின்கள், 8 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கப்பலின் தீ காரணமாக வெளிவந்த நச்சு இரசாயனங்கள் மற்றும் எரிபொருள் கடல் நீரில் கலந்துள்ளதாக, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மன்றிற்கு தெரிவித்தார்.
கடந்த மே 20ஆம் திகதி திடீரென தீ பரவலுக்குள்ளான MV X-Press Pearl கப்பல், இலங்கையின் கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் வைத்து பாரிய தீ அனர்த்தத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அது கடலில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென நீதிமன்றம் அறிவித்திருந்தது.