ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தனக்கு சொற்ப இலாபங்கள் கிடைக்கின்றது என்பதற்காக பொறுத்தமில்லாத ஒரு நபருக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை தாரை வார்த்துக் கொடுப்பது கல்குடா சமூகத்திற்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்கின்ற மோசடியான விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.ஹாருன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சபை உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (01) ஓட்டமாவடியில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் இரண்டு பாரிய கட்சிகளுடன் போட்டியிட்டு எமது வேட்பாளர்களின் பாரிய முயற்சியின் பயனாக ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினை பெற்றோம். இது வரலாற்றில் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த முதல் ஆசனமாகும்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனமானது சபையின் ஆட்சியை கைப்பற்றுவதை தீர்மானிக்கும் ஆசனமாக காணப்பட்டது. இதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எங்களுக்கு பிரதி தவிசாளர் பதவி வழங்கினால் ஆதரவு வழங்குவதாக கூறி நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடசிக்கு ஆதரவு வழங்கி உப தவிசாளர் பதவியினை பெற்றுக் கொண்டோம்.
குறித்த தேசிய பட்டியில் ஆசனத்தினை அதிகம் வாக்கு பெற்றவருக்கு இரண்டு வருடமும், இரண்டாவது இடத்தில் உள்ளவருக்கு மூன்றாவது வருடமும், மூன்றாவது உள்ளவருக்கு நான்காவது வருடமும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் பேறு கட்சிக்கு சென்றதால் அதிக வாக்குகளை பெற்றவரே பதவி வகித்து வந்த நிலையில் மூன்று வருடம் முடிந்த நிலையில் தனது பதவியினை பிரதி தவிசாளராக செயற்பட்ட அஹமட் லெப்பை இராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ள மாஞ்சோலை வட்டார வேட்பாளர் நுபைல் என்பவருக்கு எனது இராஜினாமா மூலம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடத்திற்கு பிரதி தவிசாளராக செயற்பட்ட அஹமட் லெப்பை கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இதில் திட்டமிட்ட வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுபைர் ஹாஜியார் இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். தேர்தலில் போட்டியிட்டவர்கள் யார் என்பது தெரியாது, பெற்ற வாக்குகள் தெரியாமல் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தனது பகுதியில் மாத்திரம் செயற்பட்டு வருகின்றார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா மீது உள்ள தனிப்பட்ட கோபத்தின் அடிப்படையில் அல்லது ஏதாவது கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் பொறுத்தமில்லாத பட்டியலில் தற்காலிகமாக போட்டப்பட்ட நபருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தினை வழங்கியிருப்பது என்பது உண்மையிலே கல்குடா சமூகத்திற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள், அமைப்பாளர் ஆகியோருக்கு செய்த சமூக துரோகமாக நான் பார்க்கின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுபைர் ஹாஜியார் தனக்கு சொற்ப இலாபங்கள் கிடைக்கின்றது என்பதற்காக பொறுத்தமில்லாத ஒரு நபருக்கு பதவியை தாரை வார்த்துக் கொடுப்பது கல்குடா சமூகத்திற்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்கின்ற மோசடியான விடயம் என்பதாகும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் செலவு செய்து கஷ்டப்பட்டு வாக்குகளை சேகரித்த வேட்பாளர்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆசனம் சூழற்சி முறையில் வழங்கப்படும் என்று இருந்த போதிலும் தற்காலிகமாக போடப்பட்ட ஒருவருக்கு, அவரே தனது கட்சிக்கு வாக்களிக்காத நிலையில் அவருக்கு இந்த உறுப்பினர் பதவியை வழங்குவது உகந்ததல்ல. எனவே தேர்தலில் போட்டியிட்ட, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நபருக்கு வழங்குவது சாலச்சிறந்தது என்றார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.