ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2020 போட்டியில் டென்மார்க் பேட்மின்டன் ஆட்டத்தில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றது.
27 வயதுடைய டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன் இந்த வெற்றியை பெற்றார். இன்று இறுதியாட்டத்தில் இவருடன் சீனாவின் வீரர் சென் லோங் மோதினார். 21 – 15 – 21 – 12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பன்னிரண்டு செட்களை அவர் ஆடியுள்ளார், அனைத்திலும் வெற்றியே. எந்த ஒரு வீரருக்கும் ஓர் ஆட்டத்தையாவது வெற்றியாக வழங்காமல் அனைவரையுமே இரண்டு ஆட்டங்களிலேயே தோற்கடித்தது பெரும் சாதனையாகும்.
2016 ஒலிம்பிக்கில் இவர் வெண்கல பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பூப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் தங்கத்தை இன்னொரு டென்மார்க் வீரரும் பெற்றுள்ளார். 1996ம் ஆண்டு போல் இயரிக் கூய்யர் என்பவர் தங்கம் வென்றிருந்தார்.
இப்போது இவருடைய வெற்றி டென்மார்க் ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளது. தங்கம் வெல்வோருக்கு டென்மார்க் அரசு ஓர் லட்சம் குறோணர் பரிசாக வழங்கும் என்பது இன்னொரு சிறப்பு தகவல்.
டென்மார்க் இளவரசர் பிரட்றிக் தனது வாழ்த்துக்களை வெற்றி வீரருக்கு தெரிவித்தார்.
சின்னம் சிறிய டென்மார்க் ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வெல்வது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
அதேவேளை இதுவரை டென்மார்க் இரண்டு தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி இரண்டு வெங்கலப்பதக்கமுமாக ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.
படகு வலித்தல் : அன்னமரி ரின்டொம் : தங்கம்.
பூப்பந்தாட்டம் : விக்டர் அக்சல்சன் : தங்கம்
ஸ்கீற் சூட்டிங் : யெஸ்பா கன்ஸ் : வெள்ளி
நீச்சல் 50 மீட்டர் : பர்னிலா புளும் : வெங்கலம்
படகோட்டம் இருவர் : பிரட்றிக் வெய்ரவெல், யோக்கிம் சுற்றர் : வெங்கலம்
அலைகள் 02.08.2021