மாகாணங்களுக்கு இடையிலான பஸ்,ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்.
இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் செயல்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் நேற்று முன்தினம் (31) ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
நாளாந்தம் பணிகளுக்கு செல்லும் பயணிகளுக்காக பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுவான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்றும் அவர் கூறினார்.
பாரிய அனர்த்த நிலைக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது கொவிட் 19 தொற்றில் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பயணிகள் சுகாதார பாதுகாப்பு விதி முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பஸ் மற்றும் ரயில்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை.
இன்று ஏற்கனவே இருந்த நேர அட்டவணையின்படி, போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இந்த போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
——–
ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கடந்த 2009 – 2010 காலப்பகுதியில் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.