ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் தமிழக சட்டசபையில் கருணாநிதி உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோது, முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வகையில்,தமிழக சட்டசபைக்கு இது நூற்றாண்டு விழாவாகும். இந்த விழாவுடன் தமிழக முதல்-அமைச்சராக 5 முறையும், எம்.எல்.ஏ.வாக 13 முறையும் இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான கோலாகல விழா, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.
சரியாக மாலை 5.02 மணிக்கு விழா தொடங்கியது. சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம், நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் மு.அப்பாவு பொன்னாடை, புத்தகம், நினைவு பரிசை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். வீட்டில் புத்தக அலமாரிக்கு முன்னால் யானை சிலையின் மீது வலது கையை வைத்தபடி, சிரித்து கொண்டிருப்பதுபோல் கருணாநிதியின் உருவப்படம் தத்ரூபமாக இருந்தது. அந்த படத்திற்கு கீழே, “காலம் பொன் போன்றது, கடமை கண்போன்றது!” என்ற பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவரைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை உரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரைஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள். முன்னர், மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஆகஸ்டு மாதம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும். ஏனெனில், இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. விடுதலைக்கு பிறகான ஆண்டுகளில், தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்களும், தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.
மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861-ம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புதான், 1921-ம் ஆண்டில், சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் கீழ், அத்தகைய அமைப்பு செயல்படுவதற்கு, பல வரையறைகளும், சவால்களும் நிச்சயம் இருந்தன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்த புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டது. விடுதலை போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும், விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்தது. மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாக, ஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்தது. சட்டமன்ற கவுன்சில், பின்வரவிருக்கும் காலத்திற்கான பல சட்டங்களை இயற்றியது.
மெட்ராஸ் சட்டமன்றம், ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளுமைக்கான விதைகளை விதைத்தது. நாட்டு விடுதலைக்கு பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன.
ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டு. தேவதாசி முறையை ஒழித்தல், விதவை மறுமணம், பள்ளிகளில் மதிய உணவு, நிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் வினியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும்.
இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முற்போக்கு சிந்தனையை எடுத்துக்காட்டுகின்ற வகையில், மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “மந்திரம் கற்போம், வினைத்தந்திரம் கற்போம், வானை அளப்போம், கடல் மீனை யளப்போம், சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம், சந்தி, தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்”.
இதை இவ்வாறு விளக்கலாம். வேதம், அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம். நாம் வானத்தையும், பெருங்கடல்களையும் ஆராய்வோம். நிலவின் இயல்புகள் என்னவென்று நாம் தெரிந்துகொள்வோம். நமது தெருக்களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம்.
மண்ணின் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத்தில் கவுரவிக்கும் பாரம்பரியம் உள்ளது என்பதை அறிவது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, சி.ராஜகோபாலாச்சாரி, சி.என்.அண்ணாதுரை, கே.காமராஜ், ஈ.வி.ராமசாமி, பி.ஆர்.அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், முகமது இஸ்மாயில் சாஹிப், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பி.சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் போன்ற பல தலைவர்களின் படங்கள் இப்பேரவையில் ஏற்கனவே உள்ளன.
இப்போது இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இருக்கும். நான் இங்கு வந்தபோது, காந்தியடிகளின் மனசாட்சிக் காவலராக திகழ்ந்தவரும், சுதந்திர போராட்ட வீரர்களில் சிறந்த தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். ஜனாதிபதி மாளிகையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் அவர். அவருடைய வருகை இந்த மதிப்பிற்குரிய அரங்கினையும் அலங்கரித்தது. அவர் சென்னை மாநிலத்தின் முதல் பிரதமர் அல்லது முதல்வர் ஆவார். அவருக்கு பின் வந்தவர்களும், முன்மாதிரியாக திகழ்ந்த அரசியல் தலைவர்கள்.
இருப்பினும், ராஜாஜிக்கு பின் வந்தவர்களில், கருணாநிதி தான் நீண்ட காலம் ஆட்சி செய்தார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்துச் சென்றார்.
இந்தியா, விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தபோது, ‘கலைஞர்’ தனது இளமைப் பருவத்திலேயே, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப்பிரிந்தார். உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஏழை, எளிய மக்களுக்காக அவர் பணியாற்றத் தொடங்கியபோது, நீண்டகாலமாக வெளிநாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, அன்னிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும், கல்வியறிவின்மையாலும் சிக்கலில் இருந்தது.
அவர் தமது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், இதன் மக்களும் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தி அடைந்திருக்க வேண்டும். தமது நீண்ட கால, ஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும், தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்கு திருப்தியளித்திருக்கும்.
தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?. எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால், மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகு குறைவு. அவரைப் பொறுத்தவரை, அவரது தாய்மொழி வழிபாட்டுக்குரியது. தமிழ், நிச்சயமாக, மனிதகுலத்தின் மிகச்சிறந்த, மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். உலகம் முழுமையும் அதன் வளமான பாரம்பரியத்தில் பெருமை கொள்கிறது. ஆனால், அது செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி.
கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலைவராக திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர். விடுதலை பெற்று 75-வது ஆண்டு நிறைவை நாடு கொண்டாடும்போது, இத்தகைய தலைவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் செல்கின்றன. .
அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும், மரியாதையிலும் ஒன்றுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வழியில், இந்திய தாய்த்திரு நாட்டிற்கு சேவை செய்ய பாடுபட்டனர். ஒரு ஆற்றில் வெவ்வேறு கிளை நதிகள் ஒன்றிணைவது போல, அவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றிணைந்தனர்.
அவர்கள் அனைவரும் காந்தியிடம் ஒரு சங்கமத்தைக் கண்டனர். மகாத்மா காந்தி நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் சிறந்தவைகள் அனைத்தின் ஆளுமையாகவும் திகழ்ந்தார்.
டாக்டர் அம்பேத்கரைப் பற்றி சிந்தியுங்கள். எத்துணை உயர்ந்த மேதை. எத்தகைய தொலைநோக்கு. ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு பெயருடனும், எண்ணற்ற மற்றவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதற்காக தங்கள் வசதிகளை, தொழில்களை, சில சமயங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.
நிகழ்காலத்தையும், எதிர்கால முன்னேற்றத்தையும் புரிந்துகொள்ள, கடந்த காலத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுப்பிரமணிய பாரதி மற்றும் பிறரின் வாழ்க்கையில், உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள். நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன். தெரிந்த மற்றும் தெரியாத விடுதலை போராட்ட வீரர்களுடன் தொடங்கிய பணிகள் தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றினார். மாலை 6 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.