அண்ணன்-தம்பி ஆகிய 2 டைரக்டர்களுக்கு, ஆளுக்கு 5 பாடல்கள் வீதம் 10 பாடல்கள் எழுதியிருக்கிறார், கவிஞர் வைரமுத்து.
அண்ணன் – சீனுராமசாமி, தம்பி – விஜயகுமார். அண்ணன் இயக்கும் படம்: இடி முழக்கம். தம்பி இயக்கும் படம்: அழகிய கண்ணே. 2 படங்களுக்கும் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து இருக்கிறார்.
சீனுராமசாமி இயக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். விஜயகுமார் இயக்கும் படத்தில், லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு 6-வது தேசிய விருது பெற்றுத் தந்த ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலுக்கு இசையமைத்தவர், என்.ஆர்.ரகுநந்தன்.
இந்த இரு படங்களில் ஒன்று தேசிய விருது பெறும் என்று இசைக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
சீனுராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தில், ‘கானா விலக்கு மயிலே… ஒன்னக் கண்ணால் காங்கணும் குயிலே’ என்ற காதல் கதறல் இடம்பெறுகிறது. “கவிஞர் வைரமுத்துவின் கவிதை மீதுதான் என் கதை நடந்து போகிறது’’ என்கிறார், சீனுராமசாமி.
விஜயகுமார் இயக்கும் ‘அழகிய கண்ணே’ உச்சக்கட்ட காட்சியில் இறுக்கமான சூழலில், உருக்கமான பாடல் ஒன்றை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். ‘கண்ணோ கருமணியோ கருகிக் கெடக்குதம்மா’ என்ற பாடல் படம் பிடிக்கப்பட்டபோது, படப்பிடிப்பு தளத்தில் இருந்த பல பேர் தேம்பித் தேம்பி அழுதார்களாம்.
“ஒவ்வொரு வரியிலும் வைரமுத்திரை இருக்கிறது” என்றார், விஜயகுமார். இந்த ஆண்டுக்குள் வெளிவரும் 2 படங்களிலும் இசையும், தமிழும் போட்டி போடும் என்று பேசப் படுகிறது.