இலங்கையில் மேலும் 98 மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 98 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 4,919 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 98 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 5,017 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 98 பேரில், 47 பேர் ஆண்கள், 51 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——-

நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்19 பரிசோதனைகளில் டெல்டா கொவிட்19 திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சமூகத்தினுள் டெல்டா கொவிட்19 திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிதென்பது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர டுவிட்டர் பதிவொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிபரத்தைக் காட்டும் வரைபை தனது டுவிட்டர் பதிவில் இணைத்துள்ள கலாநிதி சந்திம ஜீவந்தர, தற்போது கொழும்பு நகரத்தினுள் டெல்டா கொவிட்19 திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவிவருவதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 தொற்றாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறியப்பட்டிருந்ததுடன், 19.3 சதவீதமானோரிடையே டெல்டா திரிபு கண்டறியப்பட்டது.

எனினும், ஜூலை 31 ஆம் திகதியாகும்போது, இந்த நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளதை டுவிட்டர் பதிவின் ஊடாக அவதானிக்க முடிகிறது.

நாட்டில் கொவிட்19 தொற்று நிலைமை மற்றும் பரவல் தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரின் வெளிப்படுத்தலுக்கமைய, ஜூலை 31 ஆம் திகதிய நிலைமையின்படி, கொழும்பில் கொவிட்19 தொற்று உறுதியான 90 சதவீதத்துக்கு அதிகமானோரின் மாதிரிகளில் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியதொரு பாரதூரமான நிலைமையாகமென கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts