bநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு தினமும் 100க்கு மேற்பட்டு காணப்படுவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 05 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணி நேரத்துள் மேலும் 02 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 03 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 03 இலட்சத்து 406 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 36 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
——-
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியமற்ற எந்தவொரு பயணத்தையும் மாகாணங்களுக்கிடையில் மேற்கொள்ள வேண்டாம். மாகாணங்களுக்குள் உட்புகும் பிரதான மற்றும் குறுக்கு வழிகள் அனைத்து முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். தனிப்படுத்தல் சட்டத்தைமீறி எவரும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் கைதுசெய்யப்படுவர். அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பெறப்படும் என்றார்.