தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.13) தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள உயர் கல்வி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:
* இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* மேலும் தரத்தை மேம்படுத்தி, அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள், குறிப்பாக, ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். கற்றல் மேலாண்மை அமைப்பு மற்றும் நிறுவன வள திட்டமிடல் மென்பொருளானது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமைந்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
* 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.* ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும்.
* மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும்.
தனி கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்.