சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகை மீரா மிதுன் இன்று அழைத்து வரப்பட்டார்.
நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீரா மிதுன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருப்பதாக வெளியான தகவலையடுத்து சைபர் கிரைம் போலீசார் கேரளா விரைந்தனர். குறிப்பிட்ட இடத்தில் மீரா மிதுனை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது திடீரென மீரா மிதுன், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தார். ‘இவர்கள் என்னை கைது செய்ய வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடக்க வேண்டுமா? என்னை கைது செய்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று வீடியோவில் பேசி உடனடியாக அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டார்.
ஆனால் சைபர் கிரைம் போலீசார் எதையுமே பொருட்படுத்தாமல் பெண் போலீசார் உதவியுடன் மீரா மிதுனை கைது செய்தனர். மீரா மிதுனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியது தொடர்பான வீடியோக்களை ஆதாரமாக வைத்து மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.