இலங்கையின் வடபுலத்தில் கடலலைகள் தாலாட்டிச் செல்லும் கம்பர்மலை என்ற கடலோரக் கிராமத்தில் தங்கவடிவேல் மாஸ்டர் என்ற நல்லாசிரியனின் மகனாகப் பிறந்தது சௌந்தரின் பாக்கியம். பெரியப்பா குழந்தைவேல் பிறவிக் கலைஞன். குரல் வளத்திற்கு, சங்கீத ஞானத்திற்கு இணை சொல்ல முடியாத காம்பீரியம் அவருடையது. அத்தை சகுந்தலை சுந்தரம் சங்கீத உபாசகி. குடும்ப நண்பர் சுந்தரப்பா வீட்டுச்சுவரில் இசைத் தயாரிப்பாளர் ஜி.ராமநாதனின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கும் ரசிகன்.
கம்பர்மலை ஒலிபெருக்கி உரிமையாளர்களும் தேர்ந்த இசைரசிகர்கள். இசை பிரபஞ்சகானமாய் அந்தச் சிற்றூரின் பனை வடலிகளையும் வயல் வெளிகளையும் கடற்கரையையும் நிறைத்து, தளும்பி வழிந்தது இசைவெள்ளம். இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்களைத் தங்கள் ஊருக்கு வரவழைப்பதற்காக காணியையே அடகு வைத்து இழந்து போன இசைப் பிரியர்களின் வாழ்ந்த நிலம் அது. இசைரசனை சௌந்தருக்கு குடும்ப முதுசமாய், ஊர் வழங்கிய அருஞ்செல்வமாய் வாய்த்திருக்கிறது.
சௌந்தருக்கு சுவாசக்காற்றாய் ஜீவனைக் கொடுத்திருக்கிறது இசை. பால்ய வயதிலிருந்து இன்று வரை இசை அவரின் தேடலாய், ஞானமாய், தியானமாய் ஆகர்ஷித்திருக்கிறது. கர்நாடக இசை, தமிழிசை, மெல்லிசை, நாட்டார் இசை என்பன பற்றிய மிகத் தெளிவான பார்வையைச் செதுக்கிக் கொண்டவர் சௌந்தர். ரசனையின் பலத்தில் மட்டுமல்ல, ஆதாரங்களின் துணையுடன் தன் பார்வையைச் செழுமைப்படுத்திக் கொண்டிருப்பவர். செவ்வியல் இசை மரபினைப் போற்றும் அதேவேளை, மக்கள் மத்தியில் இசைரசனையைக் கொண்டு சேர்க்கும் புதிய சோதனைகளை வரவேற்கும் பாங்கினை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
தமிழ்த் திரை இசையின் வளர்ச்சி பற்றிய தேடல், இசையமைப்பாளர்கள் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகள், வேற்றுநாட்டு இசைகளை உள்வாங்கிய கலவைச் சோதனைகள் ஆகியவற்றை விளக்க சௌந்தர் இந்த நூலில் அள்ளித் தெளித்திருக்கும் இசைவிபரங்கள் பிரமிப்பூட்டுகின்றன. லத்தீன் அமெரிக்க இசை, ஜிப்ஸி இசை, அரபு இசை, மேற்கத்தைய இசை, ஹிந்துஸ்தானி இசை என்று தேச, மொழி எல்லை கடந்த இவரது இசை ஈடுபாடு வியப்பூட்டுவதாகும். திரை இசையின் ஆரம்ப இசையமைப்பாளர்களின் அரும் சாதனைகளை அவர் போற்றிச் செல்லும் இடங்களில் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் யாரும் இருக்க முடியாது. சௌந்தரின் இசைரசனைக்கு அவரது தீவிர இலக்கிய ஈடுபாடும் வலுச் சேர்த்திருக்கிறது. அவரின் சேகரத்தில் குவிந்து கிடக்கும் திரை இசைப் பாடல்கள் அவரது இடையறாத, ஆண்டாண்டு காலமாய் மேற்கொண்ட முயற்சிகளின் களஞ்சிய முத்துக்கள்.
வணிகரீதியில் செய்யப்படும் மேலோட்ட இசைச்சேர்க்கைகளின் வெறுமை இந்த இசைரசிகனின் நெஞ்சில் கொதிப்பேற்றிருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. வெற்றோசைகளுக்கும் பிரபல்யங்களுக்கும் மயங்கிப் போகாமல் இசையின் ஆத்மாவைத் தரிசிக்கும் உயர்ந்த பார்வை சௌந்தரின் ஆழ்ந்த இசை ரசனையில் வேர்கொண்டதாகும். நவீன தொழில்நுட்பத் துணையுடன் வெறும் சத்தங்களின் சேர்க்கையாய் இசையைக் காணாது, அதனைப் பூரண கலை வெளிப்பாடாய், ஆத்ம எழுச்சியாய் விகசிக்கும் தருணங்களை சௌந்தர் தரிசிக்கும் இடங்கள் சத்தியமானவை.
ளையராஜா என்ற தேர்ந்த இசைக்கலைஞனின் மகத்துவத்தை திரை இசை வரலாற்றில் நிறுவிச் செல்லும் இடங்கள் மிக நுட்பமானவை. சிற்றுண்டியை அல்ல, திருப்தியான முழுச்சாப்பாட்டை ரசிகனுக்கு வழங்கும் இசைப்பரிசாரகன் அவர். நாட்டார் இசையில் தோய்ந்து, உலக இசைப் பரப்பில் வியாபித்த இளையராஜாவின் பேராற்றலை விளக்கும் இசைக்கையேடாக இந்நூல் சிறக்கிறது.
திறமை மிகுந்த ஓவியனாக, மூக்கு, கைகள் என்பனவற்றை மிகநுட்பமாக வடிக்கும் கோட்டோவியக்காரனாக, தைலவண்ணங்களில் அசலான உருவமைதியை ஓவியங்களைத்தரும் சைத்திரீகனாக , வாழ்க்கையை ஓவியத்துடன் ஆரம்பித்த கலைஞனாக நமக்குத் தெரியவரும் சௌந்தரின் பிறிதொரு இசை ஆளுமையை இந்நூல் துலாம்பரப்படுத்துகிறது.
இசையின் அழகியல் உருவாக்கத்தில் வெவ்வேறு இசைமரபுகள் சங்கமித்து, எழிற்கோலம் காட்டும் மாயவித்தையை அனுபவிக்க, உணர்த்த, கட்டவிழ்க்க முனையும் சௌந்தரின் பேராற்றல் இந்த நூலெங்கும் வியாபித்திருக்கிறது. தன் உயர் இசை ரசனையை வெளிப்படுத்துவதில் ஆற்றொழுக்கு போன்ற செறிந்த அவரின் மொழிவளமும் இந்த நூலின் வெற்றிக்குத் துணை சேர்த்திருக்கிறது.
அமரர் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்களின் இசைமரபையும், ஓவியமரபையும் அடியொற்றி வளர்ந்த ஒரு இளங்குருத்தின் வெற்றிப் பயணம் இது.