சொந்த படம் எடுத்து கடனில் மூழ்கிய கதாநாயகி வெ.ஆ.நிர்மலா தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘சினிமா படம் தயாரிப்பது சூதாட்டம் போன்றது. புகழின் உச்சத்துக்கு தூக்கியும் விடும். ஒரேயடியாக கடனில் மூழ்கவும் வைக்கும். புகழின் உச்சத்தை அடைந்தவர்களை விட, கடனில் மூழ்கியவர்கள் ஏராளம். அவர்களில் நடிகைகள் சாவித்ரி, கண்ணாம்பாள், ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா என பட்டியல் நீள்கிறது’’ என்கிறார், ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர்.
சாவித்ரி, கண்ணாம்பாள் இருவரும் காலமாகி விட்டார்கள். வெ.ஆ.நிர்மலா மட்டும் தன் அனுபவங்களை சொன்னார்.
‘‘என் சொந்த ஊர், கும்பகோணம். எங்க குடும்பம், பணக்கார குடும்பம். அப்பா நீதிபதி. நாங்கள் சென்னை வந்ததும், நடிகை வைஜயந்தி மாலா நடனப்பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டேன். பரதநாட்டிய கலைஞராக வருவதற்கே ஆசைப்பட்டேன். சினிமாவுக்கு வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
டைரக்டர் ஸ்ரீதர், ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்காக நடிகர்-நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். நான் ரொம்ப சின்னப்பெண்ணாக இருப்பதாக கூறி, என்னை தேர்வு செய்யவில்லை. அடுத்து அவர், ‘வெண்ணிற ஆடை’ படத்தை தொடங்கியபோது, கதாநாயகிகளில் ஒருவராக என்னை தேர்வு செய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன்’’ என்கிறார், வெ.ஆ.நிர்மலா.