கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது குறித்து, சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர விடுதிக்குச் சென்று மீராமிதுனை கைது செய்தனர்.
இதையடுத்து அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றபோது, தன்னை போலீசார் கொடுமைபடுத்துவதாக கூறி மீரா மிதுன் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினார். அதன்பிறகு போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு தான், சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் வாகனத்திலேயே அழைத்து வந்தனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.